Sunday, January 13, 2019

ஓய்வாயிருக்கையில் இன்பக்கேணி ஒன்றாய் இணைகையில் இயங்கு கருவி

கோவை, டிசம்பர் 16, 2018

2016 ஆம் ஆண்டு நவம்பர் முதல் கோவையில் அனலி தன் இலக்கியக்கூடுகையை தொடர்ந்து நடத்தி வருகின்றது. ஆறு கூடுகைகள் நடந்தபின் சிறு தொய்வு ஏற்பட்டிருந்தது. கூடுமிடம் சரிவர அமையாததுவே இத்தொய்விற்கு முக்கியக் காரணம். தற்போது கோவை பீளமேட்டில் இயங்கிவரும் ஜி 18 அலுவலகத்தில் கூடுகைக்கான இடம் ஒழுங்கு செய்யப்பட்டு புத்துணர்வோடு இயங்க முயல்கிறது. அதன் அடிப்படையில் 16.12.2018 அன்று மாலை ஐந்து மணியளவில் அனலி ஜி 18 ஆதரவு அலுவலக அறிமுகவிழாவை நடத்தியது.

ஓவியரும் பேராசிரியருமான திரு. ந. சுப்ரமணியன் அவர்களின் கிராமியக்குரல் பாடலோடு நிகழ்வு இனிதே ஆரம்பித்தது. நிகழ்வுக்கு தலைமை தாங்கிய  அனலியின் தலைவர் திரு. இரா. அரிகரசுதன் அவர்கள் வர்வேற்றும் தொடக்க உரையாற்றியும் பேசினார்.

பங்கேற்பாளர்கள் தங்களைத் தாங்களே அறிந்து கொள்ளும் பொருட்டு அறிமுகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜி 18 பொதுநல அமைப்பின் பொறுப்பாளர் திரு. பார்த்தீபன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். அனலியின் கலை இலக்கியச் செயல்பாடுகளுக்கு தங்கள் அமைப்பு வழங்கியிருக்கும் ஆதரவே இவ்விடம். மேலும் இணைய இயலக்கூடியச் செயல்பாடுகளுக்கு தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வதாக ஆதரவளித்தார்.

அதனைத் தொடர்ந்து கோவா பன்னாட்டு திரைப்படவிழாவிற்கு சென்று வந்திருந்த வானம்பாடி கவிதை இயக்கத்தின் காத்திரமான கவிஞர்களுள் ஒருவரும் கோவை கலைக்கல்லூரியில் தமிழ்பேராசிரியராயிருந்த கவிஞர் அக்னிபுத்திரன் தற்போதைய கனல்மைந்தன் அவர்கள் கோவா திரைப்பட விழாவின் அனுபவங்களையும் உலகத்திரைப்படங்களின் தன்மைகள் பற்றியும் விரித்துரைத்தார்.

அனலியின் எதிர்காலச் செயல்பாடுகளாக திரு. அரிகரசுதன் அவர்கள் அனலியின் அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றும் விதமாக 2019ஆம் ஆண்டு முதல் கோவையில் செயல்படவிருக்கும் அனலி கலை இலக்கியப் பள்ளியைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்து பங்கேற்பாளர்களின் ஆதரவு கிடைத்திட வேண்டினார். மக்களின் குரலாக கலை இலக்கியங்கள் ஒலிக்க வேண்டும். மக்கள் ஓய்வாயிருக்கையில் இன்பக்கேணியாகவும் ஒன்றாய் இணைகையில் இயங்கு கருவியாகவும் கலை இலக்கியங்களின் இருப்பும் இயக்கமும் இருக்க வேண்டும் என்பதுவே அனலின் அடிநாதம் என்று தெளிவுபட எடுத்துரைத்தார்.

அவரைத் தொடர்ந்து தமிழ் பேராசிரியரும் எழுத்தாளருமான முனைவர் சுபசெல்வி அவர்கள் ”வெள்ளிமலை விராலிமலை” எனும் பாடலைப் பார்வையாளர்களை தன்வயப்படுத்தினார்.

இயற்கை ஆர்வலரான கோவை யோகநாதன் இவர் இலட்சக்கணக்கான மரங்களை தன்னார்வமாக  நட்டு வளர்த்தவர். இதற்காக குடியரசுதலைவரிடம் விருது பெற்றவர். அவரகள் அனலியின் செயல்பாடுகளுக்காக தான் இயற்கை விவசாயம் செய்யும் இடத்தை பயன்படுத்த ஒத்துக்கொண்டு உறுதியளித்ததோடு அனலியின் தலைவர் திரு. அரிகரசுதன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து பாராட்டினார். வீதிநாடக கலைஞரான கோவை திரு. அரவிந்தன் அவர்கள் நாடகம் சார்ந்து முன்னெடுக்கப்படும் அனைத்து செயல்பாடுகளுக்கும் தன்னால் இயன்ற உதவியை முழுமையாக வழங்குவதாக உறுதிகூறி அனலியின் செயல்பாடுகளை வாழ்த்தினார்.

இறுதியாக திரு. சுப்ரமணியன் அவர்களின் நன்றி உரைக்க கூடுகை இனிது நிறைவடைந்தது. நிகழ்விற்கு கோவையின் கலை இலக்கிய ஆர்வலர்களும் ஆளுமைகளும் மாணவப் படைப்பாளர்களும் கலந்து கொண்டு ஆதரவளித்த்து நிறைவைத் தந்தது.

இவண்
இரா. அரிகரசுதன், தலைவர், அனலி