Sunday, January 13, 2019

பிரபஞ்சன் நினைவேந்தல்

கோவை, 05.01.2019

மறைந்த எழுத்தாளர் திரு. பிரபஞ்சன் அவர்களின் நினைவேந்தல் சிறப்பு கூடுகையாக எட்டாவது அனலி இலக்கியக் கூடுகை அமைந்தது. கூடுகையை ”ஒளிபடைத்தக் கண்ணினாய் வா வா வா..” எனும் பாரதியின் பாடலை ஓவியர் ந. சுப்ரமணியன் அவர்கள் பாடி ஆரம்பித்து வைத்தார்கள்.

கூடுகைக்கு தலைமைதாங்கிய கவிஞர் இரா. அரிகரசுதன் வரவேற்க, கண்ணன், ஜின்னா, இஸ்மாயில் ஆகியோர் தங்கள் கவிதைகளை வாசித்தனர். கவிதைகளின்  பாடுபொருள் பற்றி பார்வையாளர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். மறைந்த படைப்பாளர் திரு. பிரபஞ்சன் அவர்கள் நினைவேந்தலாக அவர்தம் வாழ்வும் படைப்பும் பற்றி கவிஞர் த. ஜீவலெட்சுமி அவர்கள் உரையாற்றினார். பிரபஞ்சனின் சிறுகதை ஒன்றை வாசிக்கவும் செய்தார். தனக்கான வாழ்வை நிறைவாய் வாழ்ந்தவர் பிரபஞ்சன் என்றும் எளியவ உள்ளம் கொண்டவர் என்றும் பகிர்ந்து கொண்டார்.

பிரபஞ்சனோடு தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் கவிஞர் கனல் மைந்தன் அவர்கள். இன்னும் சில படைப்பு கடமைகளை நிறைவேற்றியிருக்க வேண்டியவர் என்றார் அவர். குறிப்பாக குடி சிலபடைப்பாளர்களின் பலகீனமாக மாறியிருப்பது பற்றிய வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்.

”அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு” எனும் பாடலை சுப்ரமணியன் பாட அதனைத் தொடர்ந்து திரு. சங்கர் அவர்களின் நன்றியோடு கூடுகை இனிது நிறைவடைந்தது.

இவண்

இரா. அரிகரசுதன்